புதன், 21 ஏப்ரல், 2010

அக்குபங்சர் ஹீலர்ஸ் ஆர்கனைசேஷன் சார்பாக தமிழக அரசிற்கு அனுப்பப் பட்ட அறிக்கை

அக்குபங்சர் ஹீலர்ஸ் ஆர்கனைசேஷன் சார்பில் அக்குபங்சர் ஹீலர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கக்கோரி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர்கள், தலைமைச்செயலாளர், உள் துறைச்செயலாளர் என அனைவருக்கும் இவ்விளக்க அறிக்கை அனுப்பப் பட்டுள்ளது. இதன் சுருக்கம் பத்திரிக்கைகளுக்கு செய்தியாகத் தரப்பட்டுள்ளது.

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள் : அக்குபங்சர் மருத்துவ சேவைக்கான தொழில் பாதுகாப்பு குறித்து.

வணக்கம்.

எங்களது அமைப்பான அக்குபங்சர் ஹீலர்ஸ் ஆர்கனைசேஷன் தமிழ்நாடு முழுவதும் இருக்கிற இருநூற்றுக்கும் மேற்பட்ட அக்குபங்சர் ஹீலர்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுவரும் எங்கள் அமைப்பு தமிழ்நாடு அரசின் சங்கப் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற சங்கமாகும்.(பதிவு எண்: 234/2008).

அக்குபங்சர் என்ற மருந்தில்லா மருத்துவமுறை 1980 களில் இருந்தே இந்தியாவில் பின்பற்றப்பட்டு வருகிறது. இயற்கையான மருத்துவ முறைகளில் ஒன்றான அக்குபங்சரை உலக சுகாதார நிறுவனம் (WHO) 1962 (Alma Ata) ஆம் வருடம் அங்கீகரித்தது. மருந்துகள் எதையும் பயன்படுத்தாத மருந்தில்லா மருத்துவமுறையாக அக்குபங்சர் இருந்ததால் இந்தியாவில் ஏற்கனவே நடப்பில் இருந்த மருத்துவ வழிகாட்டும் சட்டங்கள் (IMC, Homoeo Act, Siddha, Ayurvedha & Unani Acts) எதுவும் அக்குபங்சருக்கு பொருந்தவில்லை. இந்த மருத்துவ முறை பற்றியும், அதன் குணமளிக்கும் தன்மை பற்றியும் பலமுறைகள் இந்திய பாரளுமன்றத்தில் ஆலோசிக்கப்பட்டது. (Ministry of Health & Family welafare, Unstarred Question No.524 to be answered 21.11.2001 on Acupuncture Therapy) தொடர்ந்து, தமிழ்நாடு அரசு சட்டசபை கூட்டத்தின் மேதகு.ஆளுநர் அவர்களின் உரையில் 9.3.2002 இல் அக்குபங்சர் முறைக்கு தனியார் பங்களிப்பை ஊக்குவிப்பது தொடர்பான கருத்து முன்வைக்கப்பட்டது. ( Governor’s Address in the legislative Assembly on 9th March 2002 No.24 ).

இந்நிலையில் அக்குபங்சர் உள்ளிட்ட முறைப்படுத்தப்படாத மாற்று மருத்துவங்கள் குறித்த உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் மத்திய அரசு ஆணை ஒன்றை வெளியிட்டது. ( No.R.14015/25/96-UH(R)(Pt),Ministry of Health & Family welfare, Dated 25 November 2003 ). இதுவே இந்திய அரசின் அக்குபங்சர் குறித்த வழிகாட்டும் ஆணையாகும். இவ்வாணையின் அடிப்படையில் அக்குபங்சர் மற்றும் ஹிப்னோதெரபி இரு முறைகளும் சிகிச்சை முறைகளாக (Mode of Therapy) அங்கீகரிக்கப்பட்டது. ஒரு பதிவு பெற்ற மருத்துவரோ அல்லது முறையாகப் பயிற்சி பெற்ற நபரோ அக்குபங்சர் முறையில் சிகிச்சையளிக்கலாம் என்று அரசாணை அனுமதியளித்தது. அதே நேரத்தில் அக்குபங்சர் முறையைப் பின்பற்றும் பயிற்சி பெற்ற நபர் தன்னை டாக்டர் என்று குறிப்பிடக்கூடாது என்றும் அந்த ஆணை தடைவிதித்தது.

அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் அக்குபங்சரில் முறையாகப் பயிற்சி பெற்ற எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் டாக்டர் என்று எங்கும், எதிலும் குறிப்பிடுவதில்லை. மருந்துகள், மாத்திரைகள், ஊசிகள் என்று பிற மருத்துவ முறைகளின் சிகிச்சை முறையை நாங்கள் பின்பற்றுவதும் இல்லை. தூய்மையான அக்குபங்சர் முறையில் மட்டுமே எங்கள் உறுப்பினர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். எங்கள் அக்குபங்சர் ஹீலர்ஸ் ஆர்கனைசேஷனின் விதிமுறைகளிலேயே( Memorandum of Society Registration 02 -9 ) பிற மருத்துவ முறைகளைக் கையாள்வது தடைசெய்யப்பப்பட்டுள்ளது. சங்கத்தின் குறிக்கோள்களில் ஒன்றாக “மருந்தற்ற உலகம்” ( Save world without Drugs - Objects of the society 02 -14 ) என்பதையே நோக்கமாகவும் கொண்டுள்ளோம்.

எங்கள் உறுப்பினர்கள் அனைவருமே பி.எஸ்.எஸ். என்ற கல்வி நிறுவனத்தில் முறையாக அக்குபங்சர் பயிற்சி பெற்றவர்கள். பாரத் சேவக் சமாஜ் (பி.எஸ்.எஸ்) என்ற இந்த அமைப்பு இந்திய பாரளுமன்றத்தில் தேசிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 1952 இல் நிறுவப்பட்ட அமைப்பாகும். இந்த அமைப்பின் நிறுவனத்தலைவர் முதல் பாரதப்பிரதமர் மேன்மைதாங்கிய ஜவஹர்லால் நேரு அவர்கள் ஆவார். 1952 இல் இருந்து கிராம முன்னேற்றம், கல்விக்கான திட்டங்கள் என்று இந்தியா முழுவதும் இயங்கி வரும் பி.எஸ்.எஸ் பல மாநில மத்திய அரசு நிதித்திட்டங்களின் உதவியுடன் இயங்கிவருகிறது. இந்த அமைப்பு இன்று 800 வகையான பயிற்சிகளை அளிக்க நாடு முழுவதும் 6200 கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. தேசிய பல்கலைக்கழகத்துடன் இணைந்து பல சமூகக் கல்லூரிகளையும் (BSS Community college) இப்போது துவக்கிவருகிறது. பி.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி மையத்தில் அங்கீகரிக்கப்பட்ட அக்குபங்சர் பாடத்திட்டத்தில் முறையாக பயிற்சி பெற்றவர்கள்தான் எங்கள் சங்கத்தின் உறுப்பினர்கள்.

முறையான பயிற்சி பெற்று, மத்திய அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில் பிற மருத்துவ முறைகளின் கலப்பின்றி தூய்மையான அக்குபங்சர் முறையைப் பின்பற்றி வரும் எங்கள் உறுப்பினர்களின் மருத்துவ சேவையில் அண்மைக்காலத்தில் சில இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன. டாக்டர் என்ற சொல்லையே பயன்படுத்தாத எங்கள் உறுப்பினர்களை போலி டாக்டர் என்றும் , அக்குபங்சர் மருத்துவமுறையே போலியானது என்றும் காவல்துறை மற்றும் பத்திரிக்கைகள் தவறாகக் கருதுகின்றன.

இவ்வாறான தவறான கருத்துக்களால் இந்திய அரசியல் சாசனச் சட்டம் தரும் அடிப்படை உரிமையான தொழில் சுதந்திரத்தில் ( 19(1)G ) அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நாங்கள் முறையாகப் பயிற்சி பெற்ற சிகிச்சை முறையை பின்பற்றுவதற்கு ஏற்படும் தடைகளை நீக்கி, தொழில் ரீதியான அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பு அளித்து, தொடர்ந்து மக்களுக்கு பணி செய்ய உதவுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.

இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள,

( ஹீலர். கே.முகமது மீரா)

தலைவர்,

அக்குபங்சர் ஹீலர்ஸ் ஆர்கனைசேஷன்,

தமிழ்நாடு.

Copy to :

1. Hon.Chief Secretary,

Secretrieate, Chennai.

2. Hon.Home Secretary,

Secretrieate, Chennai.

3. Hon.The Director General of Police,

Santhome, Chennai.

4. Hon.Inspector General of Police,

South Zone, Madurai.

5. Hon.The Deputy Inspector General of Police,

Madurai.

6. Hon.The Deputy Inspector General of Police,

Dindigul.

7. Hon.District Collectors,

All Districts.

8. Hon.Superindentats of Police,

All Districts.

9. Hon.Commissioners of police,

All corporations.